பெருமாள்புரத்தில் ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு வகுப்பு
- பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார்.
- பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மின் வினி யோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி பாதுகாப்பு வகுப்பு இன்று காலை நடைபெற்றது.
அதில் பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், மின் பாதைகளில் பணிபுரியும் பொழுது மின் விநியோகத்தை நிறுத்தி நில இணைப்பு செய்து அதன் பின்பு பணி புரிவது அவசியம். காற்று திறப்பான்களை திறக்கும் பொழுதும், மூடும் போதும் கையுறையை உபயோகப்படுத்த வேண்டும். பெருமாள் புரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று சூறை காற்றாக வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மின் பாதைகளுக்கு அருகில் செல்லும் மரக் கிளைகளை மின்னோட்டத்தை நிறுத்தி அப்புறப்படுத்தி மின் தடங்கல் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும்.
மின்கம்பங்களிலும், மின்மாற்றிகளிலும் பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது. அப்படி பேசினால் அதனால் சிந்தனை சிதறல் ஏற்படும். தங்கள் பகுதி மின் நுகர்வோர்களிடம் அந்தந்த பகுதி பணியாளர்கள் தொலைபேசி எண்களையும், மின்னகம் தொலைபேசி எண் 94987 94987 ஆகியவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இந்த பாதுகாப்பு வகுப்பில் பெருமாள்புரம் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.