செம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
- மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக சித்தையன்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
- மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர்(48). இவர் சித்தையன்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின்வழித்தட ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் செம்பட்டி அடுத்த நரசிங்கபுரம் அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக சித்தையன்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செம்பட்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான இச்சம்பவம் குறித்து சித்தையன்கோட்டை உதவி மின்பொறியாளர் கிருஷ்ணஜெயந்தி செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.