கொடைக்கானலில் தனியார் விடுதி சாலை ஆக்கிரமிப்பு - சுற்றுலா பயணிகள் கடும் அவதி
- தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்கு வரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
- கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பல்வேறு சாலைகளில் அனுமதி பெறாத தனியார் தங்கும் விடுதிகளில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பிரதான சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் லாஸ்காட்ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள பி.டி.ராஜன் சாலை ஆகிய பகுதிகளிலும் பஸ்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஏரிச்சாலையில் இருந்து வரும் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான நெடுஞ்சாலையான அரசு மருத்துவமனை சந்திப்பு சாலையில் உள்ளதங்கும் விடுதிக்கு வரும் அனைத்து பேருந்துகளையும் பிரதான நெடுஞ்சாலையிலேயே நிறுத்துவதால் காலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் மற்றும் பிற நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மகாராஜா என்கிற தங்கும் விடுதியை வாடகை ஒப்பந்தத்தில் எடுத்துள்ள உரிமையாளர் மற்றும் மேலாளர் போக்குவரத்து நெரிசலை தட்டி கேட்பவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசுவதோடு, நான் யார் என்று உனக்குத் தெரியுமா என்று மிரட்டுகிற தொனியில் பேசுவதாகவும் நாங்கள் நிறுத்தும் வாகனங்களை அகற்ற சொன்னால் நடப்பதே வேறு என்று மிரட்டி வருவதாகவும் உள்ளூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எத்தனை முறை போலீசார் அங்கு நிறுத்த ப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிரதான நெடுஞ்சாலைகளிலேயே பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த தங்கும் விடுதி முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா? கார் பார்க்கிங் வசதி உள்ளதா? என்பதை மாவட்ட காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். கொடை க்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் பயணிகள் இதுபோன்ற பிரச்சினையால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் சமயங்களில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதுபோன்ற தனியார் ஆக்கிரமிப்பால் மேலும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது என சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.