கிணற்றுக்குள் விழுந்த எருமை மாடு மீட்பு
- எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
- கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் விண்டெக்ஸ், குத்தகை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (61). இவரது வீடு, தோட்டம் அதே பகுதியில் உள்ளது.
தோட்டத்தில் 70 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. அதில் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணறு தடுப்பு சுவர் இல்லாத தரைமட்ட கிணறு ஆகும். இவர் தனது தோட்டத்தில் 8 மாத சினையுடன் கூடிய எருமை ஒன்று வளர்த்து வந்துள்ளார்.
இந்த எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
உடனடியாக கருப்புசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது எருமை மாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.
கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர். அதன்படி கிரேன் வரவழைக்கப்பட்டு எருமை மாட்டை பத்திரமாக மீட்டனர்.