4 மணி நேரம் நீடித்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை
- கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை ஆய்வு குழு அலுவலர் சாந்தி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
- புரோக்கர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை ஆய்வு குழு அலுவலர் சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5.30 மணி அளவில் வந்தனர்.
பின்னர் அவர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தவுடன் உடனே அலுவலக கதவை பூட்டினர். பின்னர் அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வா ளர் கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் அறையில் அதிரடியாக சோதனையிட்டனர்.
சோதனை தொடங்கி யதும் அலுவலகத்தில் இருந்த அனைத்து செல்போன்களையும், அவர்களிடம் இருந்த ஓட்டுநர் உரிமம் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் இரண்டு புரோக்கர்கள் கையில் பணத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து துண்டு சீட்டு ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 9.30 மணி வரைசோதனை நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று புரோக்கர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.