ஈரோடு ரெயில் நிலையம்-பஸ் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்
- பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
- இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை, பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதன் மறுநாள் காணும் பொங்கல் எனத் தொடர்ந்து இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.
இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். ஏராளமான பேர் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரெயில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.
இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இதேபோல் இன்று இரவும் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு மாநகரில் முக்கிய வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்கே.வி. ரோடு பகுதிகளில், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் குவிய தொடங்கியது.
பெரிய ஜவுளி கடைகள் முதல் சாதாரண நடை பாதை ஜவுளி கடைகள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான பேன்சி கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.