புதர் மண்டி கிடக்கும் அவல்பூந்துறை படகு இல்லம்
- மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
- இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளூர் ஊராட்சியில் ஒரு பகுதியும், அவல்பூந்துறை பேரூராட்சியில் ஒரு பகுதியும் என மொத்தம் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.
இந்த குளத்திற்கு எல்.பி.பி. வாய்க்காலில் இருந்து வரும் கசிவு நீர் வடிந்து குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த குளத்தைச் சுற்றி ஒரு பகுதியில் கருவேலம் மரங்களும், மற்றொரு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது.
இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது. அதேபோல் விவசாய கிணறுகள், ஆழ்துழாய் கிணறு போன்றவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை.
மேலும் அவல்பூந்துறை குளத்திற்கு அருகில் வெள்ளோடு பறவைகள் சரணாயம் உள்ளதால் அங்கிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த குளத்திற்கு வந்து சென்று உணவுகளை தின்றுவிட்டு செல்கிறது .
இந்நிலையில் அவல்பூந்துறை குளத்தை படகு இல்லம் அமைப்பதற்காக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் கடந்த 2013–-2014-ம் ஆண்டு ஒரு கோடியே 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படகு இல்லம் அமைப்பதற்காக குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் படுத்தும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் ஆங்காங்கே தண்ணீர் இருந்ததால் சமன் செய்யும் பணி காலதாமதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து தண்ணீர் வற்றியதையடுத்து மீண்டும் குளத்தை ஆழப்படுத்தி சமன்செய்யும் பணி நடைபெற்றது.
மேலும் படகு இல்லத்திற்கு தேவையான பூங்கா, பார்வையாளர்கள் அமர்வதற்கு செட், மேல்நிலை குடிநீர் தொட்டி, பார்வையாளர்கள் நின்று பார்ப்பதற்கான மேடைகள், ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறைகள் மற்றும் அவல்பூந்துறை மெயின் ரோட்டில் படகு இல்லம் என்ற ஆர்ச் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெயின்ரோட்டில் இருந்து படகு இல்லம் வரை கான்கிரீட் சாலை, ஏற்காட்டில் இருந்து இரண்டு படகு என படகு இல்லத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டது.
ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமலும், சமன்படுத்தாமலும் இருந்ததால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை படகு இல்லம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது.
இதனால் படகு இல்லத்தில் உள்ள பூங்கா, பார்வையாளர்கள் செட் போன்றவைகள் புதர் மண்டி கிடக்கிறது.
இதுகுறித்து மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி கூறியதாவது:
அவல்பூந்துறை குளம் முழுவதும் மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு பகுதி குளூர் ஊராட்சியிலும் மற்றொரு பகுதி அவல்பூந்துறை பேரூராட்சியிலும் உள்ளது. கடந்த 2013–-2014-ம் ஆண்டு குளத்தில் படகு இல்லம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
ஆனால் குளத்திற்கு வரும் தண்ணீர் அதிகரித்ததால் வேலை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை. குளத்தில் தண்ணீர் வற்றினால் மட்டுமே மீண்டும் சமன்படுத்தி படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.