மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது
- வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 2 கிலோ பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மாணிக்கம் பாளையம், முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 20 ஆயிரம் இருக்கும். விசாரணையில் அவர்கள் சரவணகுமார் (23), விக்னேஷ் (28), மெய் அழகன் (23) என தெரிய வந்தது.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ பொட்டலங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீசார் நசியனூர் ரோடு, கைகாட்டிவலசில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த தமிழ்செல்வன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா கடத்திய சசிகுமார்(33) என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.