புளியம்பட்டி வார சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
- புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும்.
- கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.
இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு ரூ.15 ஆயிரம் மற்றும் செம்மறியாடு ரூ.12ஆயிரம் வரை விற்றது.
இதில் மொத்தம் கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.