அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
- வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
- மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்தார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ4.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் குருவரெட்டியூர் ஊராட்சியில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கோணார்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் குருவரெட்டியூரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.
குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் குளோரி நேட்டர் பொருத்தப்பட்டு உள்ளதையும், ஒலகடம் பேரூராட்சி நாகிரெட்டிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.குகானந்தன், பஷீர் அகமது, குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.அசோக்குமார் மற்றும் துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.