கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் தந்தைக்கு பதில் சிகிச்சை அளித்த மகன் மீது புகார்
- கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
- இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, ஜூன். 22-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.
அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.
அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.
இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.