ரூ.1.77 லட்சத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசார்
- வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்டு சதீஷிடம் ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
- ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம், குறுந்தகவல் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (50). சொந்தமாக தொழில் செய்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரது செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு கடன் வேண்டுமா? ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று தருகிறோம் என்று இருந்தது. இதை உண்மை என்று நம்பிய சதீஷ் அவர்கள் கூறிய செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை சதீசுக்கு அனுப்பி வைத்தனர். அதனை பூர்த்தி செய்து கொடுக்குமாறும் கூறியுள்ளனர். சதீஷும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.
விண்ணப்ப கட்டணம் ரூ. 5 ஆயிரம் தரவேண்டும் என்று கூறினர். பின்னர் ஜி.எஸ்.டி.க்கு பணம் வேண்டும் என்று கூறி 20 ஆயிரம், 50 ஆயிரம் என கொஞ்சம் கொஞ்சமாக சதீஷிடம் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டனர். சதீஷும் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினார்.
பின்னர் மீண்டும் அந்த நிறுவனத்தினர் சதீஷிடம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ் ஏன் அடிக்கடி பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.
அதன் பின்னர் அந்த நிறுவனத்தினர் போன் செய்வதை நிறுத்தி விட்டனர். பின்னர் அவர்கள் கூறியது போன்று சதீசுக்கு கடன் கொடுக்காமல் இழுத்து அடித்தனர்.
இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த சதீஷ் இது குறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொலைபேசி எண்ணை வைத்து அவர்களின் வங்கி கணக்கை முடக்கினர்.
விசாரணையில் போலியான ஒரு நிறுவனத்தை தொடங்கி அவர்கள் சதீஷிடம் மோசடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வங்கி கணக்கை முடக்கி பணத்தை அதிலிருந்து மீட்டு சதீஷிடம் ரூ.1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்தக் குறுந்தகவலை திறந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அதில் வங்கி முகவரி குறித்த தகவலை அந்த பெண் பரிமாறி உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 77 ஆயிரத்து 950 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் பிறகு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்கு வங்கத்தில் இருந்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு அந்த வங்கி கணக்கை முடக்கினர். பின்னர் அந்த பெண்ணின் பணம் ரூ.77,950 மீட்டு அந்த பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.
ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம், குறுந்தகவல் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.