ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
- ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
- மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதையடுத்து டெங்கு காய்ச்சல் பரவி விடாமல் இருக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் 4 மண்டலத்திலும் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு மண்டலங் களிலும் வார்டு வாரியாக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக கடந்த சில நாட்களாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று பார்க்கின்றனர். அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால் அந்த தண்ணீரை அகற்ற வலியுறுத்திகின்றனர். மேலும் அந்த இடத்தில் மஞ்சள், உப்பு போட்ட சொல்லி வருகின்றனர்.
இதுபோல் வீட்டு அருகே தண்ணீர் தேங்காத வண்ணம் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டி பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சிரட்டை, பழைய டயர் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி கொள்ளாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையை ஏற்படுத்து பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 4 மண்டலத்திலும் வார்டு வாரியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். பெரிய வாகனங்களில் ராட்ச எந்திரங்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.
மிகக்குறுகிய சந்துகள், வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.