சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்
- வைகாசி விசாக விழா சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை வைகாசி விசாக விழா நடந்தது. முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
66 வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.
தொடர்ந்து நேற்று மதியம் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதை யடுத்து முருகன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி, தீர்த்த குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.