- 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.
- பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் வரும் 12 முதல் 24-ந் தேதி வரை இரு வார கால வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடக்க உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதாகும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்று போக்கால் ஏற்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் வயிற்று போக்கால் இறக்கின்றன. பிறந்த குழந்தைகளில் பிறந்த உடன் சீம்பால் புகட்டாத குழந்தைகள், பிறந்து 6 மாதம் வரை பிரத்யோகமாக தாய்ப்பால் புகட்டாமல் இருத்தல், சுகாதாரமற்ற வளர்ப்பு முறை, கை சுத்தம் பேனாமல் இருத்தல், வளர்ப்பு குழந்தைகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பான குடிநீர் பற்றி விழிப்புணர்வு இல்லாததும் காரணமாகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 45,354 குழந்தைகள் உள்ளனர்.
இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை முன்னிட்டு அனைத்து அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு 'சின்க்' மாத்திரை, ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் வழங்கப்பட்டு தயாரிக்கும் முறை, பயன்பாடு குறித்து விளக்கப்படும்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலின் முக்கியத்துவம், கை கழுவுதல் முறை பற்றி விளக்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர், கை கழுவுதல் முறை விளக்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.