கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு
- ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
- இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பணி வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கடந்த 9-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 8 நபர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் தையல் பயிற்சிக்கும், 14 நபர்கள் முதல்நிலை நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை நேர்முக தேர்வுக்கும், 20 நபர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கும், ஒரு நபர் சிறுதொழில் அமைக்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பணி ஆணையை வழங்கினார்.
இதுகுறித்து வேலை வாய்ப்பு பெற்ற கருங்கல் பாளையம் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கூறியதாவது:
எனக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவர் திடீரென கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதனால் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பெரும் துயரத்தில் இருந்த எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் புதிய வழியை காட்டியுள்ளது.
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். விரைவில் பணியில் இணைகிறேன். இதன் மூலம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் என்னால் உழைத்து எனது மகளை காப்பாற்ற முடியும்.
இந்த நம்பிக்கை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.