உள்ளூர் செய்திகள்

விவசாயிடம் ரூ.35 லட்சம் பணம் பறிப்பு-தலைமறைவாக இருக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2023-07-16 07:03 GMT   |   Update On 2023-07-16 07:03 GMT
  • விவசாயிடம் ரூ.35 லட்சம் பணம் பறிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
  • கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மொடக்குறிச்சி,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டியை சேர்ந்த பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் சிவாஜியிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சிவாஜி நமக்கு மேலும் ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார். இதனையடுத்து லக்காபுரம் வந்தவுடன் ராஜ்குமார் என்பவருக்கு சிவாஜிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும், உறவினர்கள் 2 பேரையும் ஏற்றிக்கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே வந்த காரில் இருந்த 4 நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக்கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் உறவினர்கள் 2 பேரையும் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் வைத்திருந்த ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி எனது பணம் ரூ.35 லட்சத்தை மீட்டு தருமாறு மொடக்குறிச்சி போலீசில் சம்பவத்தன்று இரவு புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வட்டாரத்தில் கூறியதாவது:- விவசாயிடம் பணம் பறித்த கார் கொள்ளையர்கள் குறித்து புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். செல்போன் எண்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் துப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News