கியாஸ் சிலிண்டர் நிரப்பும் தொழிலாளர்கள் போராட்டம்
- பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் செயல்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதையத்து நேற்று ஈஸ்வர மூர்த்தியை முதன்மை பிளாண்டு மேலாளர் கிரிஸ் வரதராஜன் என்பவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். இதில் 74 தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தொழிலாளர்கள் பலர் குவிந்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
மேலும் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்தார். தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.