பெண் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
- முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
- கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையம்பகுதியைச் சேர்ந்த தவசியப்பன் (45). இவர் சின்னத்தம்பி பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். தற்போது அவரது மனைவி சுமதி தவசியப்பன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது பழைய வீட்டில் வெயில் காலம் என்பதால் அங்கு காற்று நன்றாக வரும் என்று அங்கே படுத்து தூங்கினர். இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு 2 மணி அளவில்வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று உள்ளே சென்று முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதும் அதில் இருந்து இறங்கிய ஒருவர் பெண் பஞ்சாயத்து தலைவர் சுமதி தவசியப்பன் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.
மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி மோப்ப நாய் நின்றது. தொடர்ந்து போலீசார் நகை-பணம் திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.