மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
- அந்தியூர் பகுதிக்கு பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும்.
- வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், சின்னத்தம்பி பாளையம், வெள்ளையம்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், செல்லம் பாளையம், நால்ரோடு, செம்புளிசாம்பாளையம், புதுமேட்டூர், முனியப்பம்பாளையம், நகலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பவானி மோட்டார் வாகன அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வாகன புதுப்பிப்பதற்கும், புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கும் மற்றும் விபத்து ஏற்படும் வாகனங்களை கொண்டு சென்று காண்பிப்பதற்கும் ஏராளமான வண்டிகள் செல்கின்றது.
மேலும் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும் செல்ல வேண்டி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் பகுதிக்கு கோபியில் மோட்டார் வாகன அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கிருந்து பவானிக்கு அலுவலகம் பிரிக்கப்பட்டு அங்கு வாகனங்கள் அனைத்தும் பவானியில் காண்பிக்கப்பட்டு வருகிறது.
இதில் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து பவானிக்கு வண்டிகளை புதுப்பிக்க செல்ல வேண்டுமென்றால் 70 கிலோ மீட்டருக்கு மேல் ஆகிறது.மேலும் தற்போது அந்தியூர் தாலுகாவாக பிரிக்கப்பட்டதையடுத்து அந்தியூர் பகுதிக்கு மோட்டார் வாகன அலுவலகம் கொண்டு வர வேண்டும் என்றும்,
மேலும் அந்தியூர் பகுதியில் இருந்து தான் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பவானிக்கு சென்று வருகிறது இங்கு வாடகை கார்,இன்ப சுற்றுலா செல்ல தேவைப்படும் டிராவல்ஸ் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் உள்ளது.
அதே போல் அந்தியூரை சுற்றி செங்கல் சூளைகள் இருப்பதினால் லாரிகளும் அதிக அளவில் இயங்கி வருகிறது .இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் புதியதாக வாங்குபவர்கள் பதிவு செய்வதற்கு பவானி செல்ல வேண்டி உள்ளது .
இதனை கருத்தில் கொண்டு அந்தியூர் பகுதிக்கு பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.