அரசு பஸ் அடிக்கடி வராமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி
- பொதுமக்கள் பஸ்சை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள்.
- இன்று அந்த பஸ் வரவில்லை என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 84 பஸ்களில், 62 பஸ் புறநகர பேருந்தாக மதுரை, நாகர்கோயில், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயங்கி வருகிறது. மேலும் 22 பஸ்கள் டவுன் பஸ் ஆக கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதில் அவ்வப்போது வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு பஸ்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் குறிப்பாக அந்தியூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம பகுதிக்கு செல்லக்கூடிய பி 13 என்ற டவுன் பஸ், எண்ணமங்கலம், கோயிலூர் வரையில் சென்று வரும் பஸ்சில் பள்ளி நாட்களில் அந்த பகுதியில் இருந்து அந்தியூர் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.
மேலும் விசேஷ நாட்களில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பஸ்சை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் அதிகளவில் அந்த பகுதி மக்கள் இந்த பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், இன்று அந்த பஸ் வரவில்லை என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.
மேலும் கடந்த வாரம் மதியம் 1.40 மணி அளவில் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு செல்லக்கூடிய புறநகர் பஸ் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தார்கள். பஸ் புறப்படும் நேரம் ஆகியும் புறப்படவில்லை.
டிரைவர் வந்தும் நடத்துனர் இல்லாததால் பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளையும் கீழே இறங்கி மாற்று பஸ்சிற்கு அனைவரையும் போக சொல்லி கூறினர்.
இதனையடுத்து பஸ்சில் அமர்ந்திருந்தவர்கள் மாற்று பஸ்சில் சீட்டு கிடைக்குமோ, கிடைக்காதா என்று முந்தி அடித்துக்கொண்டு சென்று பஸ்சில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே வரும் காலங்களில் அந்தியூர் பணிமனையில் இதுபோன்று நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், பஸ் பயணிகள் கேட்டுக்கொ ண்டுள்ளனர்.