உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீராம்பாளையம் பகுதியில் பண்ணாரியம்மன் சப்பரம் ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.

பண்ணாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா

Published On 2023-03-28 09:59 GMT   |   Update On 2023-03-28 09:59 GMT
  • பண்ணாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடக்கிறது.
  • சத்தியமங்கலம் பகுதியில் சப்பரம் வீதி உலா நடந்தது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் மிக விமர்சியாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

மேலும் குண்டம் வளர்க்கும் இடத்தில் மஞ்சள், உப்பு, மிளகு போட்டு கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

குண்டம் விழாவில் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்குவார்கள். இதையொட்டி தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

விழாவையொட்டி பண்ணாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் புறப்பாடு தொடங்கியது. இதையடுத்து அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் திருவீதி உலா நடந்து வருகிறது.

இதில் 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி வழிபடுகிறார்கள். கடந்த 2 நாட்களாக சத்தியமங்கலம் பகுதியில் சப்பரம் வீதி உலா நடந்தது.

நேற்று இரவு கோட்டூர் பாளையத்துக்கு சப்பரம் சென்றது. இதை தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியில் அம்மன் சப்பரம் திருவீதி உலா நடந்தது.

இதை தொடர்ந்து இன்று இரவு பண்ணாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதைதொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கம்பம் நடப்படுவதால் இன்று காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

Tags:    

Similar News