பவானிசாகர் அணையில் இருந்து 2,700 கன அடி நீர் வெளியேற்றம்
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது.
- பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொலிவு இல்லாததுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது. இதனால் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
அனைத்து வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஆனால் அதே சமயம் மற்ற பிரதான அணைகளான குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியிலும், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 30.84 அடியிலும்,
வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.