உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி, மனைவி கோவை சிறையில் அடைப்பு

Published On 2022-11-30 09:58 GMT   |   Update On 2022-11-30 09:58 GMT
  • நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா பெயரிலும் சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
  • தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஈரோடு:

ஈரோடு மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக 1996-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பணியாற்றி யவர் நடேசன் (67).

இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் கடந்த 2008-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

இதில் நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியார் கல்லூரி பேராசிரி யரான அவரது மனைவி மல்லிகா (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சேர்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடேசன் மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னி லையில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.

அதில் அரசு பணியை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்த நடேசன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.1 கோடி அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து நடேசன், மல்லிகாவை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News