கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103. 88 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,214 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டப்பட்ட நிலையில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 300 கனஅடி தண்ணீர் மட்டுமே தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.