திப்பம்பாளையம் அரசு பள்ளியில் மாதிரி சந்தை அமைத்து அசத்திய மாணவர்கள்
- வகுப்பறை கட்டிடத்தில் மாதிரி சந்தையில் 21 கடைகளை அமைத்தனர்.
- கூவி, கூவி அழைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தமிழில் "சந்தை" என்ற பாடத்தை நேரடியாக விளக்கவும், கணிதத்தில் ரூபாய் மற்றும் அளவைகள் கணக்கீடு உள்ளது.
வகுப்பறை கற்பித்தலை விட இதை மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்வதற்காக பள்ளியில் தலைமைய ஆசிரியர் வேல்முருகன் தலைமையில், பட்டதாரி ஆசிரியர் ரவி ஏற்பாட்டில் 9-ம் வகுப்பு மாணவர்களை ஒரு நாள் "மாதிரி சந்தை" அமைக்க அறிவுரை கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள், தேங்காய்கள், நெல்லிக்கனிகள், கொய்யா பழங்கள், வாழை பழங்கள், பூக்கள் மற்றும் வீட்டில் உள்ள முட்டைகள், அவித்த கடலை போன்ற பொருள்களை மாணவர்கள் வியாபாரத்துக்காக பள்ளிக்கு கொண்டு வந்தனர்.
வகுப்பறை கட்டிடத்தில் அவற்றை வைத்து மாதிரி சந்தையில் 21 கடைகளை அமைத்தனர். அவற்றை மாணவர்கள் மற்றவர்களிடம் விற்பனை செய்தனர்.
செயற்கை உரம் இல்லாமல் விளைந்த பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியமான பொருட்கள் என்று பல வகையில் தங்கள் பொருள்களின் தரத்தை எடுத்துக் கூறி விற்பனை செய்தனர்.
மற்றவர்களை கூவி, கூவி அழைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்தனர்.
மற்ற வகுப்பு மாணவர்களும் சந்தையை பார்வையிட வந்து தங்களுக்கு தேவையான காய்கள், கனிகள், கீரைகள் போன்ற பொருட்களை விலை பேரம் பேசி வாங்கினார்கள்.
அவர்கள் கூறிய விலைக்கு பணம் கொடுத்து கணக்கிட்டு மீதத்தொகையை மாணவர்கள் திரும்ப பெற்றனர்.
விற்காமல் மீதம் இருந்த காய்கறிகளை சத்துணவு சமைப்பதற்கு மாணவர்கள் மனமுவந்து அளித்தனர்.
இந்நிகழ்வின் மூலம் தமிழ் துணைப்பாடம் சந்தை மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் உள்ள பாடப் பொருள்களை மாண வர்கள் ஆர்வத்துடனும் எளிதாகவும் கற்றுக் கொள்வதோடு வாழ்வியலுக்கு தேவையான கற்றல்களை மாணவர்கள் பெறுவதாக பட்டாதாரி ஆசிரியர் ரவி தெரிவித்தார்.