பரிசல் இயக்க 2-வது நாளாக தடை விதிப்பால் மாணவர்கள்-கிராம மக்கள் தவிப்பு
- நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்கு–மரஹடா, கள்ளம்பாளையம் மலை கிராமம்.இங்கு100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பகுதி மக்கள் தினமும் பரிசல் மூலம் வியாபா–ரத்திற்காக சத்தியமங்கலம், கோத்தகிரி செல்கின்றனர்.
இதேபோல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் பரிசலில் சென்று வருகின்றனர். இங்குள்ள கல்லூரி மாணவர்களும் பரிசல் மூலமே கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
பரிசல் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. ஆனால் மழைக்கா லங்களில் திடீரென மாயா ற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில் ஆபத்தை உணராமல் மக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியான அவலாஞ்சி, பைக்காரா, குன்னூர், அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பைக்காரா அணை நிரம்பியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் நீர் வர வாய்ப்புள்ளதால் நேற்று பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். அதேபோல் வியாபாரிகள் விவசாயிகள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க தடை தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இன்றும் கல்லூரிக்கு செல்லவில்லை. இதேபோல் விவசாயிகள் வியாபாரிகள் வெளியில் செல்லாமல் முடங்கிப் போய் உள்ளனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நாங்கள் பரிசில் மூலம் தான் தினமும் பிழைப்பு க்காக வெளியூர் சென்று வருகிறோம். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
சில சமயம் ஆபத்தை பொறுப்பெடுத்தாமல் பிழைப்புக்காக பரிசலில் சென்று வருகிறோம். தற்போது நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்துள்ளது. இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க முடியவில்லை. இதனால் கல்லூரி மாணவர்கள் இன்றும் கல்லூரிக்கு செல்லவில்லை.
இதேப்போல் விவசாயிகள் வியாபாரிகளும் வெளியே செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கி போய் உள்ளனர். அன்றாடம் வெளியே சென்று வருமானம் ஈட்டினால் தான் எங்கள் பிழைப்பு ஓடும். தற்போது 2 நாட்களாக கிராமத்திலேயே முடங்கி இருக்கிறோம்.
நாங்கள் நீண்ட வருடமாக மாயாற்றில் தொங்கு பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக பல்வேறு அதிகாரிகள் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.
ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை. இனியாவது அதிகாரிகள் தொங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.