உள்ளூர் செய்திகள்

ஈரோடு பஸ்-ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது

Published On 2023-06-11 07:53 GMT   |   Update On 2023-06-11 07:53 GMT
  • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது.
  • வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு, 

தமிழகத்தில் பள்ளிக ளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த தால் பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இதனையேற்று ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக பதிவானது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது. இதனால் மீண்டும் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனையேற்று 2-வது முறையாக பள்ளி தேதி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 12-ந் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், ஜூன் 14-ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் நாளை பள்ளிகள் திறப்பையொட்டி வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதன்படி ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் நேற்று இரவு முதலே மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தொலைதூரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் முன்பதிவு நிரம்பிவிட்டன.

இதனையடுத்து வெளியூரில் இருந்து ஈரோடுக்கு வரும் மக்கள் சிரமம் இன்றி வருவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.

இதேப்போல் ஈரோடு ரெயில் நிலையங்க ளிலும் கடந்த 2 நாட்களாக பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றன. வெளியூர் சென்றவர்கள் குடும்பம், குடும்பமாக மீண்டும் ஈரோடுக்கு திரும்பி வரத் தொடங்கி யுள்ளனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் இடம் பிடிக்க மக்கள் போடா போட்டி போட்டனர்.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில்களிலும் அங்கிருந்து ஈரோடு வந்த ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பள்ளி திறப்பையொட்டி ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் போன்ற பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் பெற்றோர் குழந்தைகளுக்கு புதிய புத்தகப்பை, நோட்டுகள், எழுதுப்பொருட்கள் வாங்க குவிந்தனர். இதேபோல் ஷூ, பெல்ட் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி திறப்பையொட்டி ஏற்கனவே பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News