ஈரோடு மார்க்கெட்டில் இஞ்சி விலை 3 மடங்கு உயர்ந்தது
- கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
- இதன் எதிரொலியாக இஞ்சி கிலோவுக்கு 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்தாகி வருகிறது.
குறிப்பாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு இஞ்சி கேரளா, மைசூர், தாளவாடி, கூடலூர் போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
வழக்கமாக 6 டன் வரை விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக இஞ்சி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் இஞ்சி வரத்து குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக இஞ்சி கிலோவுக்கு 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை கிடுகிடுவென விலை உயர்ந்து விற்கப்படுகிறது.
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் விலை உயர்ந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.