மூதாட்டிக்கு தனது சொந்த பணத்தில் ரூ.1000 வழங்கிய சப்-இன்ஸ்பெக்டர்
- அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.
- தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு ரேசன் கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த குப்பம்மாள் (வயது 80) என்ற மூதாட்டி பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க வந்திருந்தார்.
அப்போது அவருக்கு பரிசு பொருட்கள் மட்டும் கொடுத்து பணம் வழங்க வில்லை என அந்த மூதாட்டி புகார் கூறினார்.
இது பற்றி அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி யின் கணவர் விஸ்வநாதனிடம் அந்த மூதாட்டி கூறினார். இதையடுத்து அவர் ரேசன் கடைக்கு வந்து இது குறித்து விசாரித்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்துக்கு வந்து குப்பம்மாள் மற்றும் ரேசன் கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து கடை ஊழியர்கள் அங்கு பணத்தை சரி பார்தனர். இதில் பணம் சரியாக இருந்தது. மற்ற குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய பணம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. மேலும் மூதாட்டி பணம் தவற விட்டதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, தனது சொந்த பணத்தில் மூதாட்டிக்கு ரூ.1000 வழங்கி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்தார்.
இதை கண்ட அங்கு இருந்த பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியின் மனிதநேய செயலை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.