பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக குறைந்தது
- நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்ப குதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
எனினும் அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வந்தது.
இந்நிலையில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் இன்றும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 913 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி என மொத்தம் 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.