பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக சரிந்தது
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த மாதம் 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 78.89 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,433 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.95 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.75 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.49 அடியாக உள்ளது.