நீலகிரி மாவட்டம் முழுவதும் இ.எஸ்.ஐ திட்டம் இன்று முதல் அமலாக்கம்
- ஊட்டி மருந்தகத்தில் 4659 காப்பீட்டாளர்கள் பலன்பெறுகின்றனர்
- ரூ.21 ஆயிரம் வரை ஊதியம் பெறுவோர் பதிவு செய்து கொள்ளலாம்
கோவை,
கோவை சார் மண்டலத்தின்கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 18 இ.எஸ்.ஐ கிளை அலுவலகங்கள் மூலம் காப்பீட்டாளர்களுக்கு பயன்கள் வழங்கப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக ஊட்டியில் 2 மருத்துவர்களுடன் கூடிய இ.எஸ்.ஐ மருந்தகத்தில் 4659 காப்பீட்டாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இணைக்கப்பட்டு பலன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்தியஅரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி கூடுதலாக நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் இ.எஸ்.ஐ திட்டம் அமலுக்கு வருகிறது.
இதன்படி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இன்று முதல் மேற்கண்ட காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்து உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பலன்பெற விரும்பும் மாதம் ரூ.21 ஆயிரம் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக மேலும் தகவலுக்கு ஊட்டி இ.எஸ்.ஐ காப்பீட்டு கழகம் (0423-2447933), கோவை மண்டல சார் அலுவலகம் (0422-2362329) ஆகியவற்றின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கோவை சார்மண்டல இ.எஸ்.ஐ இணை இயக்குநர் (பொறுப்பு) ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.