தஞ்சையில் 1112 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
- காலை உணவு விரிவாக்க திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
- இதன் மூலம் 53 ஆயிரத்து 375 மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் 16 பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சியில் 21 பள்ளிகளிலும் என 37 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2445 மாணவ- மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று ஏற்கனவே முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நாளை ( வெள்ளிக்கிழமை ) நாகை மாவட்டம் திருக்குவளையில் விரிவுபடுத்தப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதல் -அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் ,பேரூராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 1111 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், கும்பகோணம் மாநகராட்சி உடன் சேர்க்கப்பட்டுள்ள சுவாமிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 1112 அரசு தொடக்கப் பள்ளிகளில் 2-ம் கட்டமாக காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 53 ஆயிரத்து 375 மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.
இந்த திட்டத்தில் சுய உதவி குழு உறுப்பினர்களை கொண்டு அந்தந்த சத்துணவு மையங்களில் காலை உணவு தயார் செய்து வழங்கப்பட உள்ளது.