உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி பெயிண்டிங் காண்ட்ராக்டரிடம் பணம் பறிப்பு

Published On 2022-11-05 10:06 GMT   |   Update On 2022-11-05 10:06 GMT
  • ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.
  • கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியில் பரபரப்பான மாலை வேளையில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 மர்மநபர்களால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு எப்போதும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலையில் எந்நேரமும் வாகன போக்குவரத்தும், உழவர் சந்தை மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் சாலையில் இருபுறமும் ஏராளமான நகர்கள் உள்ளதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன.

இதனால் பொதுமக்கள் அடிக்கடி கடைத்தெருவிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இப்பகுதியில் ஒரு சி நபர்கள் கடைத்தெரு மற்றும் கடைகளுக்கு வரும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் பணத்தை பறித்து செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் நாஞ்சிக்கோட்டை சாலையில் பல வங்கிகளின் ஏ.டி.எம்.களும் அமைந்துள்ளன. இந்த ஏ.டி.எம்.களின் அருகிலும், எதிரிலும் ஒரு சிலர் அமர்ந்து கொண்டு பணம் எடுக்க வருவோரை கண்காணித்து பணத்தை பறித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு பாதிக்கப்படும் பலரும் இதுபற்றி போலீசில் உரிய புகார்கள் அளிப்பதில்லை. இதனால் இந்த மர்ம கும்பலுக்கு இது வசதியாக போய் விடுகிறது.

இந்த மர்மநபர்கள் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாகி கிடப்பதால் பணம் இல்லாதபோது இதுபோன்ற வழிப்பறியில் அடிக்கடி ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு சண்முகாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி. இவரது மகன் ஞானசேகரன் ( வயது 44). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக உள்ளார்.

இந்த நிலையில் இவர் நேற்று மாலை நாஞ்சிக்கோட்டை சாலை பர்வீன் தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஞானசேகரனை வழி மறித்து நிறுத்தினர்.

திடீரென அவர்கள் ஞானசேகரனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். இதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனடியாக அந்த மர்ம நபர்கள் ஞானசேகரன் சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட்டில் சோதனை செய்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.

கழுத்தில் கத்தியை வைத்து இருந்ததால் ஞானசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இதை அடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது,தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இது போன்ற வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் பணம் பறிக்கின்றனர்.

பெண்கள் நடந்து சென்றால் அவர்களின் நகைகளை பறிக்கின்றனர். வாகனத்தில் செல்பவர்களையும் அவர்கள் விடுவதில்லை. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றோம்.

எனவே இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அடிக்கடி போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News