நாமக்கல்லில் போலி மருத்துவ அதிகாரி சிக்கினார்
- சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார்.
- சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் ஏராளமான மெடிக்கல் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களை குறி வைத்து ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார். தொடர்ந்து அங்கு இருந்த கடை உரிமையா–ளரிடம் மருந்து கடைக்கு உரிய அனுமதி பெறப்–பட்டுள்ளதா, காலாவதியான மருந்துகள் விற்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் கடை ஊழியருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த அந்த கடை ஊழியர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.