உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை விதைப்பதற்காக வயலில் சாம்பல் அடியுரத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

நிலக்கடலை விதைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

Published On 2022-12-12 08:28 GMT   |   Update On 2022-12-12 08:28 GMT
  • உழவு எந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு.
  • நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், குருங்குளம், வெட்டிக்காடு, திருவோணம், ஊரணிபுரம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும்.

கார்த்திகை மாத பருவத்தில் நிலக்கடலை விதைக்க வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது மானாவாரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், நிலத்தை உழவு செய்வது, அடியுரம் இடுவது, சமன்படுத்துவது, நிலக் கடலையை வாங்கி அதிலிருந்து விதையை உடைத்து எடுப்பது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறனர்.

மானாவாரி பகுதியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்புப் பணியில் ஈடுபடுவதால் உழவு இயந்திரம் மற்றும் நிலக்கடலை விதை ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலக்கடலை விதையின் விலையும் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து மருங்குளம் விவசாயிகள் கூறும் போது:-

மானாவாரி பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைத்தால் மகசூல் நன்றாக இருக்கும் என்பதால் அதிக பரப்பளவில் கடலை விதைப்பில் ஈடுபடுவோம்.

தற்போது இந்த பட்டத்தில் மழையும் பரவலாக பெய்துள்ளதால் இதனை பயன்படுத்தி நிலக்கடலை விதைக்க விவசாயிகள் முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவு நிலக்கடலை விதை இல்லாததால் புதுக்கோட்டை, அரியலூர் போன்ற மாவட்டங்களில் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கி வர வேண்டி உள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான தரமான நிலக்கடலை விதையை வேளாண்மை துறை சார்பில் வழங்க வேண்டும்.

மேலும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நிலக்கடலை விதைக்கும் எந்திரங்களை அதிக அளவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதுடன் துறை சார்பில் வாடகைக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News