உள்ளூர் செய்திகள்

நடவு பணிகளில் பெண் தொழிலாளர்கள் மும்முரம்.

சம்பா, தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம்

Published On 2022-09-25 10:06 GMT   |   Update On 2022-09-25 10:06 GMT
  • மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் வழங்க வேண்டும்.
  • வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் உரங்கள், யூரியா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி தீவிரமாக நடைபெற்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறுவை முடிந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, குலமங்கலம், தலையாமங்கலம், சின்னபொன்னாப்பூர், பனையகோட்டை, நெய்வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பா தாளடி நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாய பெண்கள் மகிழ்ச்சியாக பாடல் பாடி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி 12 லட்சம் ஏக்கருக்கு மேல் பணிகள் நடைபெற உள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது:-

குறுவை சாகுபடியின் போது சில இடங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதுபோன்று இல்லாமல் யூரியா உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் வழங்க வேண்டும். சம்பா தாளடி பணிகள் தொடங்கி விட்டதால் விதைநெல் மானிய விலையில் வழங்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க மூலம் உரங்கள் யூரியாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி கடன் வழங்க வேண்டும். வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News