விவசாயிகள் குழுவாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம்
- பண்ணை கருவிகள் ஜிப்சம், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
- சம்பா பயிர் காப்பீடு செய்ய வருகிய 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள பூவாணம் மற்றும் அழகியநாயகிபுரம் கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு பருவ பயிற்சி நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தலைமை வகித்து பேசியதாவது, கிராம முன்னேற்றத்திற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து குழுவாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம்.
வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் விதை கிராமத் திட்டத்தின் கீழ் ஆடுதுறை 39 நெல் ரகம் விசைத்தெளிப்பான்கள் 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது எனவும், பண்ணை கருவிகள் ஜிப்சம், சிங்க் சல்பேட், தார்பாலின் தேவைப்படுவோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திடவும் கேட்டுக்கொண்டார்.
நடப்பு நெல்-சம்பா பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் உடன் பயிர் காப்பீடு செய்திட அறிவுறுத்தினார்.
கலைஞர் திட்டத்தின் மூலம் தொழு உரத்தினை ஊட்டமேற்றி பயன்படுத்திட திரவ துத்தநாக உயிர் உரம் ஒரு எக்டருக்கு ஒரு லிட்டர் அளவில் 100 சதவீத மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பூவாணம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஏ.தேவதாஸ், அழகியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
முடிவில் துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.