விவசாயிகள் மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம்
- நேற்று தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது.
- மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30ஆம் தேதி விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இதையடுத்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புறவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது . இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவு எட்டப்படாததால் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் மீண்டும் விவசாயிகள் தங்களது உண்ணாவிரத தொடர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். தஞ்சை அடுத்த காட்டுகோட்டை பாதை பகுதியில் நேற்று தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாகவும் நீடித்தது.
புறவழிச்சாலையை கைவிட வேண்டும், மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும். புறவழிச்சாலை திட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.