உள்ளூர் செய்திகள்

புதர் மண்டிக்கிடக்கும் வாய்க்கால் மற்றும் மதகு.

பாசன வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-06-13 09:28 GMT   |   Update On 2022-06-13 09:28 GMT
  • திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.
  • கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவையாறு:

திருவையாறு அருகே திருப்பழனம் ஊராட்சியில் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து கும்பகோணம் மெயின்ரோடின் குறுக்கே செல்லும் திங்களூர் முனியாண்டவன் கோவில் பாசன வாய்க்கால் மற்றும் திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.

ஆனால் இந்த மெயின் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தண்ணீர் போகாதவாறு புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் இப்பாசன வாய்க்கால்களிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. தற்போது குறுவை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களில் மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளை காவிரிநீர் சென்றடைந்து விட்டது.

ஆனால் கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவிரி ஆற்றுப் பாசன நீரை மட்டுமே நம்பி நெல் பயிர் செய்யும் விவசாயிகள் இந்த பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி குறுவை சாகுபடியை விரைவாக தொடங்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News