உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விவசாயிகள் காய்-கனி நாற்றுகள் வாங்க வேண்டும்- அதிகாரி வேண்டுகோள்
- அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- விவசாயிகள் நாற்று பண்ணைகளில் விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காய்கனி நாற்று பண்ணைகளுக்கு விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் விற்பனை உரிமம் வழங்கப்பட்டு விதை ஆய்வாளர்களால் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது காய்கனி நாற்று ரகங்கள், பழமரக்கன்றுகளின் ரகங்கள் மற்றும் தென்னங்கன்றுகளின் ரகங்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விபரத்துடன் அவை முறையாக இருப்புப் பதிவேட்டில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு முறையான விற்பனை பட்டியல் வழங்கி, விற்பனை செய்யப்பட்டு வருகிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் விற்பனை உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விவசாயி பெயர், ஊர், காய்கனி நாற்று அல்லது பழமரக்கன்றுகளின் பெயர், ரகம் ஆகியவற்றுடன் விற்பனையாளர் மற்றும் விவசாயி கையொப்பமிட்ட விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நாற்று பண்ணையாளர்கள் தங்களிடமுள்ள காய்கனி நாற்றுகள், பழமரக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளை ரகம் வாரியாக கொள்முதல் பட்டியல் விபரம் குறிப்பிட்டு இருப்பு பதிவேட்டில் பதிவு செய்து முறையாக விற்பனை பட்டியல் வழங்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்திட அறிவுரை வழங்கப்படுகிறது.
அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.