மேட்டுப்பாளையம் அருகே அன்சூர் குளத்தில் டீசல் படகு பயன்படுத்த மீனவர்கள் எதிர்ப்பு
- அன்சூர் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் அன்சூர் குளம் உள்ளது. இந்தக் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு பில்லூர் அணை மற்றும் வெள்ளியங்காடு- மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர் வருகிறது. குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.
இதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை விட்டு அதனை வளர்த்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் இக்குளத்தை பராமரித்து இங்கே டீசல் படகு விடுவதாக தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு டீசல் படகு குளத்தில் விட்டால் இதிலுள்ள மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து பராமரித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
மேலும் டீசல் படகினால் மீன் குஞ்சுகள் இறக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் இதனை நம்பியுள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி குளத்தில் உள்ள மீன் குஞ்சுகள் இறக்காமல் டீசல் படகுகளை இக்குளத்தில் பயன்படுத்தாமல் துடுப்பு மூலம் பயன்படுத்தும் படகை உபயோகிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் மீனவர் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மீன் நடராஜ் கூறியதாவது:-
இக்குளத்தில் 3 தலைமுறைகளுக்கு மேலாக மீனவர்கள் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து அதனை பிடித்து விற்பனை செய்து வருகிறோம் இக்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் இக்குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் தொடர்ந்து குளத்தில் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தில் டீசல் படகுக்கு மாற்றாக துடுப்புப் படகை பயன்படுத்த அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.