உள்ளூர் செய்திகள்

கடைவீதிகளில் பூக்கள், பழங்கள் விற்பனை அமோகம்

Published On 2023-10-21 09:29 GMT   |   Update On 2023-10-21 09:29 GMT
  • கோவையில் ஆயுதபூஜை கோலாகலம்
  • மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதுகிறது

கோவை,

கோவை மாவட்டத்தில் நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுகின்றனர்.

அம்மன் கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. இந்த நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை ஆகியவை வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜையை முன்னிட்டு பெரிய, சிறிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், கடைகள் என அனைத்தும் மலர்கள், வண்ண காகிதங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு வாழை தோரணங்கள் அமைத்து வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவர்.

வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை வருவதால் இன்றே பல நிறுவனங்கள், கம்பெனிகளில் இன்றே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஆயுத பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி, பொரிகடலை, அவல், வாசலில் கட்டப்படும் வாழை இலை, அலங்காரம் செய்வதற்கு தேவையான தென்னங்குருத்து, மாவிலை தோரணங்கள் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.

இதுதவிர பழங்கள், பூக்கள் விற்பனையும் மார்ககெட்டில் சூடுபிடித்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.

பொதுமக்கள் அங்கு பூஜைக்கு தேவையான பொரி, பொரிகடலை, அவல், வெத்தலை, பாக்கு, ஆப்பிள், மாதுளை, அன்னாசி பழங்கள், வாழைப்பழங்கள், மல்லிகை, செவ்வந்தி, ஜாதிப்பூ உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் பேக்கரிகளிலும் இனிப்பு பலகாரங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜை காரணமாக பூக்கள், பழங்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை யாகும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

செவ்வந்தி-ரூ..320, சம்பங்கி-ரூ.300, அரளி-ரூ.480, ரோஜா-ரூ.320, தாமரை 1-ரூ.50, செண்டுமல்லி-ரூ.100, முல்லை-ரூ.600, கோழிகெண்டை-ரூ.100, மஞ்சை அரளி-ரூ.450, மரிகொழுந்து 1 கட்-ரூ.40க்கு விற்பனையாகிறது.

இதுதவிர வாழைகன்று 1-ரூ.30, வெள்ளை பூசணி 1 கிலோ ரூ.35, பொரி 1 பக்கா-ரூ.30. பொரிகடலை- 1 கிலோ ரூ.200,மாவிலை- 1 கட்டு ரூ.20, தென்னங்குருத்து- 4 எண்ணம் ரூ.20, எலுமிச்சை- 1 கிலோ ரூ.120

மாதுளை-1 கிலோ ரூ.220, ஆப்பிள்-1 கிலோ ரூ.180, சாத்துக்குடி-1 கிலோ ரூ.100, திராட்சை-1 கிலோ ரூ.200, கொய்யா-1 கிலோ ரூ.200, தேங்காய்-1 கிலோ ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.

Tags:    

Similar News