கடலூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 48 பேர் கைது
- அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.
- பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, வருவாய் கிராம ஊழியர்களுக்கு வழங்குவது போல் அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அரசு துறை காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீதம் பதவி உயர்வு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன் ,கிருஷ்ணமூர்த்தி தங்கவேல் ,பரமசிவம் ,சித்ரா ஆகியோர் முன்னிலையில் மாநில செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மணி தேவன், சீனிவாசன், மாவட்ட செயலாளர் ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 48 பேரை கைது செய்தனர்.