வைத்தீஸ்வரன் கோயிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்
- மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்தனர்.
- செவ்வாய் பகவான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
சீர்காழி:
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலக்ஷி என்பவர் தலைமையில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்கிரைன் நாடுகளைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் நவகிரக ஆலயங்களில் தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்தனர்.
பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்கள் விநாயகர், செல்வமுத்துக்குமார சுவாமி, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள் மற்றும் செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
அப்போது அவர்கள் காயத்ரி மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை சப்தமாக சொல்லி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வெளிநாட்டு பக்தர்கள் அருளாசி பெற்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் விபூதி பிரசாதம் வழங்கியதுடன், தெய்வ வழிபாட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது கொள்ளிடம் குழந்தைகள் நல மருத்துவர் முருகேசன், சீர்காழியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மார்கோனி ஆகியோர் உடன் இருந்தனர்.