கோவையில் பிரபல நகை கடை மீது மோசடி புகார்
- நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர்.
- பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள்
கோவை:
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் நாங்கள் சேர்ந்துள்ளோம்.
இந்த கடையின் பங்குதாரர்கள் எங்கள் கடையில் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், மேற்படி திட்டங்களில் சேர்ந்து பயன் பெறுமாறு எங்களை நம்பிக்கையூட்டினர். இதனை நம்பி நாங்களும் அந்த திட்டங்களில் சேர்ந்து பணம் கட்டினோம்.
ஆனால் அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை கட்டிய பின்னரும், எங்களுக்கு நகையோ, பணத்தையோ கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், தருவதாகவே கூறி வருகிறார்கள். ஒரு வருடமாகியும் இன்னும் தரவில்லை.
இந்நிலையில் பணத்தை கேட்டு நாங்கள்அனைவரும் பங்குதாரரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அவர்களிடம் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் பணம், நகையை தரமுடியாது என மிரட்டும் தொனியில் பேசினர்.
இதுநாள் வரை பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அவர்கள் கூறுவதை பார்த்தால் பணத்தை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிகிறது.
மேலும் பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். எனவே கடையின் பங்குதாரர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்களிடம் இருந்து நாங்கள் செலுத்திய தொகையினை திரும்ப பெற்று தந்து, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.