உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்.சி வகுப்பு நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Published On 2023-03-03 09:09 GMT   |   Update On 2023-03-03 09:09 GMT
  • போட்டித் தேர்வு எழுதுவதற்கு தமிழ் வழியில் இலவச பயிற்சி வகுப்புகளை ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை நடத்தி வருகிறது.
  • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு போட்டி தேர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

திருச்செந்தூர்:

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற தமிழக அரசின் ஆணையால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பதிதாக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் இளங்கலை பொருளியல் மாணவர்கள் தமிழ் வழியில் பயில்வதால், அவர்களுக்கு போட்டித் தேர்வு எழுதுவதற்கு தமிழ் வழியில் இலவச பயிற்சி வகுப்புகளை ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை நடத்தி வருகிறது.

இதன் தொடக்க விழாவில் பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு போட்டி தேர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கி பேசுகையில், மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், என்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், திருச்செந்தூர் வழக்கறிஞருமான வி.நடேசன் ஆதித்தன் கலந்து கொண்டு, கல்லூரியின் சமூக தொண்டுகள் பற்றியும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் பற்றியும், போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சி.முருகேஸ்வரி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பு இயக்குனர் உமாஜெயந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சுந்தரவடிவேல், ராஜ்பினோ, மோதிலால் தினேஷ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும்பெருமாள், கணேசன், சிவமுருகன், அசோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News