கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பூசாரிகள் மனு
- டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பித்தளை தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
- நாங்குநேரி சுங்கச்சாவடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோவில் பூசாரிகள்
மேலபாட்டம் அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது தலைமையில் கிராம கோவில் பூசாரிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2001-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது பூசாரிகளுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என தெரிவித்தார். தற்போது தி.மு.க. ஆட்சியில் கோவில் பூசாரி களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. அதனை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
கிராம கோவில்களுக்கு மின்கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே அங்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோவில்களில் குட முழுக்கு திருவிழா க்களை பாரம்பரிய முறை யில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
மேல குன்னத்தூரை சேர்ந்த பொதுமக்கள் மாவீரன் சுந்தரலிங்கனார் இயக்க நிறுவனர் மாரியப்பபாண்டியன் தலைமையில் கொடுத்த மனுவில், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் உடையார், கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், கடந்த 14-ந் தேதி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களது கட்சி அலுவலகத்திற்கு வந்து நிர்வாகிகள் துரைபாண்டி, செல்வம், செந்தில்குமார் ஆகியோரை சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஊதிய உயர்வு
பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜன் தலைமையில் கொடுத்த மனுவில், பழையபேட்டை, டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட பித்தளை தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு 100 -க்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகிறார்கள். இங்கிருந்துதான் டவுனில் உள்ள பாத்திர கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தொழிலாளர்களுக்கு விலைவாசிக்கேற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் நாங்குநேரி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார் மற்றும் மங்கல்ராஜ், எழிலரசு, பட்டுவேல் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து கொடுத்த மனுவில், பரப்பாடி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விஜயநாராயணம் கப்பற்படை தளத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும், தினையூரணியில் 105 அடி தேவாலய கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. எனவே கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நாங்குநேரி சுங்கச்சாவடி
நேதாஜி சுபாஷ் சேனா நிறுவன தலைவர் மகாராஜன் தலைமையில் டிரவைர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், நாங்குநேரி சுங்கச்சாவடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது கட்டணம் வசூலிக்கப்படுவதால் அங்கிருந்து விலை பொருட்களை நெல்லைக்கு கொண்டு வரும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை. தற்போது கயத்தாறு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுங்கசாவடி வழியாக சென்ற போது கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கும் அவ்வாறு உள்ளூர் வாகனங்கள் செல்வதற்கு கட்டணத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.