உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

பெரியகுளத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைப்பு

Published On 2022-09-01 05:08 GMT   |   Update On 2022-09-01 05:08 GMT
  • பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
  • 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 70 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனை அடுத்து பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வடகரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பெரியகுளம் நகர் ஒன்றியத்தின் இந்து எழுச்சி முன்னணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் பெரியகுளத்தின் முக்கிய வீதிகளான அரண்மனை தெரு, வி.ஆர்.பி தெரு, மற்றும் தென்கரை சுதந்திர வீதி, அக்ரகாரம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்பு பெரியகுளம் பாலசுப்ரமணி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர்பாண்டியன், மாநில ஊரக வளர்ச்சிப் பிரிவு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அதிமுக நகரமன்ற வழிகாட்டுதல் குழு தலைவர்சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையில் 4 துணைகண்காணிப்பாளர்கள், 6 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News